கோவை,
குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர், 100 திருக்குறள்களை அதற்குரிய விளக்கங்களுடன் ஒப்பிக்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார் மேட்டுப்பாளையம் நீதிபதி..
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் கடந்த 31ஆம் தேதி சாலையோரம் நின்றிருந்தவரிடம் தனியார் கல்லூரி மாணவர்கள் மூவர் தகராறில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்கள்.
மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்களை பிணையில் விடுவித்தார்.
அதே நேரம், “மூன்று மாணவர்களும் தினமும் 10 திருக்குறள் வீதம் 10 நாட்களில் 100 திருக்குறள்களை அதற்கு உரிய விளக்கங்களுடன் மனப்பாடம் செய்து மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியரிடம் ஒப்பிக்க வேண்டும்.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.
நீதிபதியின் வித்தியாசமான இந்த “தண்டனை” அனைவரையும் கவர்ந்தது.