பிரபல சாமியார்களில் ஒருவரான கல்கி சாமியாரின் தலைமை அலுவலகம் உள்பட அவருக்க சொந்தமான நாடுமுழுவதும் உள்ள சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் ரூ.500 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கல்கி பகவான் தலைமறைவாகி விட்டதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாகவும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், நான் எங்கும் ஓடவில்லை, இங்கேயே இருக்கிறேன் என்று கல்கி பகவான் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆசிரமத்தை நடத்தி வருபவ்ர, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொடக்கத்தில்  ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகுமாருக்கு தேவையான பணம் கிடைக்காத நிலையில்,  ரியல் எஸ்டேட், எல்.ஐ.சி. ஏஜெண்டு என பல தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென  ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு மக்களை ஏமாற்றத் தொடங்கினார்.

“நான் விஷ்ணுவின் அவதாரம் என்றும், நானே “கல்கி பகவான்” என்று அழைத்துக் கொண்டு மக்களை கவர்ந்தார். பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்த அவருக்கு  பண மழை கொட்டியது. இதையடுத்து சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் விஜயகுமார் முதலில் சிறிய ஆசிரமம் கட்டினார். பிறகு ஆட்கள் வருகையும் வருவாயும் அதிகரித்ததால் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்ய பாளையத்தில் மிக பிரமாண்டமான ஆசிரமம் கட்டினார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. அதுபோல அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலும் கல்கி ஆசிரமத்துக்கு கிளைகள் இருக்கின்றன. வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கல்வி ஆசிரமம் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. குறிப்பாக கட்டுமான துறையில் பல நூறு கோடி ரூபாய்களை கல்கி ஆசிரமம் முதலீடு செய்துள்ளது. வெளிநாடுகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, ப்ளு வாட்டர் ஆகிய பெயர்களிலும் கல்கி ஆசிரமம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த வகையில் கல்கி ஆசிரமத்திற்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மா பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரிதா ஆகிய பெயர்களிலும் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கல்கி ஆசிரமம் சுமார் 25 நாடுகளில் பினாமி பெயர்களில் ஓட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. கல்கி ஆசிரமத்திற்கு வேறு பெயர்களில் கப்பல்களும், சிறிய ரக விமானமும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி கல்கி ஆசிரமத்திலும், அதன் கிளைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் 400 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த சோதனை நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமையுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும், நேரடி வரி விதிப்பு துறையின் செய்தி தொடர்பாளர் சுரபி அலுவாலியா கூறியதாவது:-

கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.500 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கணக்கில் வராத ரூ.65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.45 கோடி இந்திய பணமாகும். மீதமுள்ளவை அமெரிக்க டாலர்களாக உள்ளன. மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் ஹவாலா முறையில் பணபரிமாற்றம் நடந்து ரூ.100 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதற்கு உரிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை ஆராயப்பட்டு வருகின்றன. பினாமி பெயர்களில் நிலம் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 19 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கல்கி அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகள், நன்கொடை வரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 24 வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. அது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கல்வி பகவான் உள்பட அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவரது மருமகள் பிரிதா இருவரும் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கவே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தான் வெளிநாட்டுக்கு செல்லவில்லை இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி பகவான் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வழக்கம்போல ஆசிரமங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தலைமறைவாக இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. .

” நாங்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை, நாங்கள் எங்கும் செல்லவில்லை. நாங்கள் நேமத்தில் இருக்கிறோம் (தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் அமைத்த ஆசிரமம்) நாங்கள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று அந்த வீடியோவில் கல்கி கூறினார்.

நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.  ஆனால் நாங்கள் நேமத்தில்தான் இருக்கிறோம், இங்கிருந்து செயல்படுகிறோம், என்றவர்,  “நாங்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக அரசாங்கமோ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையோ சொல்லவில்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. நாங்கள் எதையும் கைவிட மாட்டோம். விஷயங்கள் வழக்கம் போல் தொடரும். வழக்கம்போல விஷயங்கள் தொடர்கின்றன என்று கூறினார்.

கல்வி பகவான் பேசும் வீடியோ….

https://youtu.be/mbOXKa_czBA