டில்லி:

மீப ஆண்டுகளாக மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரணைக்கு வரும் வழக்குகள் குறைந்தவண்ணம் உள்ளது.  கடந்த 207ம் ஆண்டைய கணக்கின்படி பார்த்தால் சுமார் 50 சதவிகிதம் அளவுக்கு சிபிஐ விசாரணைகள் குறைந்துள்ளன. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஆரம்பகாலங்களில் மத்திய அரசு ஊழியர்களின், ஊழல் விவகாரங்களை மட்டும் விசாரித்த இந்த அமைப்பு, பின்னாளில் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், மிக முக்கியமான ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், பயங்கரவாதச் செயல்கள் போன்றவற்றை விசாரிக்கும் நாட்டின் முன்னணி விசாரணை நிறுவனமாக ‘மத்தியப் புலனாய்வு அமைப்பு’ (சிபிஐ) மாறியது.

பொதுக் குற்றப் பிரிவு General Offences Wing (GOW), ஊழல் விசாரணைப் பிரிவு (Anti-Corruption Division), சிறப்புக் குற்றச் செயல்கள் பிரிவு (Special Crimes Division), பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு (Economic Offences Division), கொள்கை – சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்கள், சிபிஐ நிர்வாகம், வழக்கு தொடுப்பதற்கான இயக்ககம், மத்திய தடயவியல் ஆய்வுக்கூடம் என்று ஏழு பெரும் பிரிவுகள் சிபிஐ-க்குள் உள்ளன.

சர்வதேச குற்றக் காவல் அமைப்பு/ சர்வதேச காவல் (The International Police Criminal Organization (ICPO or Interpol)) பல நாடுகளின் சர்வதேச பிரச்சினையைப் கண்காணிக்கும் ஓர் அமைப்பு. சிபிஐ சர்வதேச காவல் அதாவது இண்டர்போலின் இந்திய பணியையும் செய்கிறது.

நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI) தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) போல் இந்தியா முழுமையும் அதிகாரம் பெற்ற அமைப்பு இல்லை. நடுவண் புலனாய்வு செயலகம் அல்லது மத்திய புலனாய்வுத் துறையின் கட்டுப்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே செல்லுபடியாகும்.

சிபிஐயின் விசாரணை இரண்டு வகைகளாக நடைபெறும். ஒன்று வழக்கின் தன்மையை பொறுத்து, மற்றொன்று பொது வழக்குகள். எது எப்படியாக இருந்தாலும், சிபிஐயின் அதிகாரமானது மத்திய அரசின் கீழ் வரும் துறைகள் மற்றும் அதன் அதிகாரிகளை விசாரிக்க மட்டுமே.

ஆனால் மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் துறை சார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் பொது ஒப்புதல் தேவை. பொது ஒப்புதல் என்பது, மாநில வரம்பு களுக்குள் இல்லாத அனைத்து மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து துறைகளிலும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு உரிமை உள்ளது.

ஆனால் சமீப ஆண்டுகளாக சிபிஐ மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் மத்தியில் நிலவி வரும் அதிகாரப் போர் அதற்கு முக்கிய காரணமாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மத்திய ஆளும் அரசுக்கு ஆதரவாக எதேச்சதிகார மாக நடந்துகொள்வதாகவும் சிபிஐ மீது எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

இதற்காக ஆதாரமாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும்  ரஃபேல் போர் விமானம் என ஏராளமான வழக்கு விசாரணைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்த குற்றச்சாட்டுக்களை  மறுத்து தாங்கள் நேர்மையானவர்கள் என்று நிரூபிக்கவும் சிபிஐ தவறி விட்டது.

மத்தியஅரசின் அடிமைகளாக சிபிஐ அதிகாரிகள் மாறிவிட்டபடியால், சிபிஐயின் அதிகாரத்தினை தங்களின் மாநில எல்லைகளுக்குள் இருந்து நீக்கி ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநில அரசுகள்  அறிவித்து உள்ளன.

ஏற்கனவே சிக்கிம், சட்டீஸ்கர், நாகலாந்து மற்றும் கர்நாடகா மாநிலங்கள்  சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளனர். ஜனதா தளம் 1998ம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சியின் போது ஜே.எச். பாட்டேல் கர்நாடகாவில் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக அந்த மாநிலங்களில், மாநில அரசின் ஒப்புதலின்றி சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சிக்கல்களினால் புகழ்பெற்ற மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு வரும் வழக்குகளும் அதிரடியாக குறைந்துள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டில்,சிபிஐ 939 வழக்கமான வழக்குகளையும் 137 பூர்வாங்க விசாரணை வழக்குகள் என மொத்தம்  1076 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அது, கடந்த  2018ம் ஆண்டில்,
765 வழக்கமான வழக்குகளையும் 134 ஆரம்ப விசாரணைகளையும் சேர்த்து மொத்தம்  899 வழக்குகளையும் பதிவு செய்திருந்தது

ஆனால், நடப்பு ஆண்டான  2019 ஆம் ஆண்டில், இதுவரை ((செப்டம்பர் 30 வரை) சிபிஐ 406 வழக்குகளை மட்டுமே  பதிவு செய்துள்ளது.

இந்த அதிரடி சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ள சிபிஐ மூத்த அதிகாரி, “புதிய வழக்குகளை எடுப்பதற்கு பதிலாக, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதில் சிபிஐ கவனம் செலுத்துகிறது என்றும்,மாநிலங்களில் இருந்து வழக்குகளை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, மாநில காவல்துறையினரை விசாரிக்க சிபிஐ அறிவுறுத்தி வருவதாகவும்  சல்ஜாப்பு கூறியுள்ளார்.

ஆனால், சிபிஐ மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதன் காரணமாக, அதனிடம் விசாரணைக்கு அனுப்பப்படும் வழக்குகளும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.