மதுரை: மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை ஆதீன மடத்தின் 293வது மகா குரு சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்றார்.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ளது. தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். இந்த மடம் முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர் கடந்த 13-ந் தேதி வயது முதிர்வுகாரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து மடத்தின் போறுப்பு இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதையடுத்து, அருணகிரிநாதர் இறந்து 10 நாட்களுக்கு பிறகு புதிய ஆதீனம் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை ஆதீன் மடத்தில் 292வது குரு மகா சன்னிதானமான அருணகிரி நாதர் மறைந்த 10 நாட்கள் கடந்த நிலையில், அதற்கான பூஜைகள், புனஷ்காரங்கள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, புதிய ஆதீன பதவி ஏற்பு விழா இன்று எளிமையாக நடைபெற்றது. இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி இன்று 293வது பீடாதிபதியாக. அதாவது மகா குரு சன்னிதானமாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள்., மதுரை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும், திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொர்டந்து, பக்தர்கள் புதிய ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாகப் பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த காந்திமதிநாதன் பிள்ளை – ஜானகி அம்மை தம்பதியினருக்கு 1954 மார்ச் 25இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் பகவதிலட்சுமணன். தனது 21ஆவது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத் தம்பிரானாகவும், 1976ஆம் ஆண்டு முதல் 1980 வரை தருமை ஆதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019ஆம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தித் தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றிவந்தார். மதுரை ஆதீனத்தில் 2019 ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எனப் பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டிருந்தார்.