சென்னை,
ரக்கோணம் எம்.பி. ஹரி ஒரு அரசியல் புரோக்கர் என்று கடுமையாக சாடி உள்ளார் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்.ஏ.

அரக்கோணம் எம்.பி.யான, எடப்பாடி அணியை சேர்ந்த ஹரி, தினகரன் கட்சியை விட்டு ஒதுங்க வேண்டும் என்று பேசியதற்கு, தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் மோதல் முற்றியுள்ளது வெட்டவெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல்,  புரட்சித்தலைவி அம்மாவுடன் 33 வருடம் உடனிருந்து அனைத்து பணிகளையும் கவனித்தவர் சின்னம்மா. அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தபோது  ஹரியும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்தான்.

ஆனால் இன்று சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் தாமாகவே அனைவரும் அ.தி.மு.க.வை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறார்.

இதை சொல்ல ஹரிக்கு என்ன தகுதி உள்ளது? ஹரி ஒரு அரசியல் புரோக்கர். தலைமை செயலகத்தில் அமைச்சர்களின் அறையில் ஏதோ ஒரு காரியம் சாதிக்க காத்துக் கிடப்பவர்.

சசிகலா மூலம் அ.தி.மு.க.வில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்தவர்கள் அதிகம். எனவே, சசிகலா பற்றி பேச அ.தி.மு.க.வில் யாருக்கும் அருகதை இல்லை.

அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பத்தினர் கோடி கோடியாக சம்பாதித்து வளர்ந்தார்கள் என்று ஹரி இப்போது சொல்கிறாரே? அப்படியானால் போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே? தைரியம் இருக்கிறதா? இவருக்கு எம்.பி. பதவி யார் மூலம் கிடைத்தது? அப்போது ஏன் இதையெல்லாம் அவர் சொல்லவில்லை.

நால்வர் அணியில் இருந்து வந்த திருத்தணி ஹரி, அம்மா படத்தை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியவர்.

அ.தி.மு.க. கட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் சின்னம்மா தலைமையில் டி.டி.வி. தினகரன்தான் அதை வழிநடத்தி செல்ல முடியும்.

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஹரி இப்போது இது போன்று பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அன்றைக்கு கூவத்தூரில் சசிகலா 2 நாள் இல்லை என்றால் இன்றைக்கு ஆட்சி இருந்திருக்காது. கட்சி நடுரோட்டுக்கு போய் இருக்கும். நன்றி இல்லாமல் அவர் பேசுகிறார்.

ஹரி போன்றவர்களின் பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவரை எச்சரிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சி இயங்கும். டி.டி.வி.தினகரன்தான் கட்சியை வழி நடத்துவார். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.’ என்று கூறினார்.