டெல்லி: உலக கோப்பை செஸ் போட்டியில் விளையாட தமிழக வீரர் இனியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் ஜூலை மாதம் 10 ம் தேதி உலகக் கோப்பை சதுரங்கப் போட்டி (செஸ்) தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்வதற்கு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் ஆன்லைனில் போட்டி நடந்தது. இதில் முன்னனி சதுரங்க வீரர்கள் பலர் பங்கேற்றனர்.
8 கிராண்ட்மாஸ்டர்கள், 7 சர்வதேச மாஸ்டர்கள், 2 பிடே மாஸ்டர் என மொத்தம் 17 வீரர்கள் கலந்து கொண்டனர். 16 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 12 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 12½ புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதனால், இனியன் உலக கோப்பை செஸ் போட்டிக்கும் தேர்வாகி உள்ளார்.
இந்தியாவில், கொரோனா பரவல் காரணமாக ஆசிய செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் உலக செஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டும் பங்கேற்க இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் யாருக்கு என்பதற்கு கடும் போட்டி நிலவியது. இதில் தமிழக வீரர் இனியன் தேர்வாகி உள்ளார். இவர் உலக செஸ் போட்டியில் கலந்துகொண்டு, பல்வேறு நாடுகளின் வீரர்களை எதிர்கொள்ள உள்ளார்.
தமிழக செஸ் வீரர் இனியன் உலக கோப்பையை வெல்ல பத்திகை டாட் காம் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.