முஸ்லீம்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு முக்கிய மதச்சடங்கு நிகழ்வாகும். இஸ்லாமின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகவும் இது வரையறை செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர யாத்திரையோடு இணைந்து வருவதுதான் பக்ரீத் தியாகத் திருநாள்.

பொதுவாக ஹஜ் பயணம் என்பது முஸ்லீம் பிறை நாள்காட்டியின்படி, ஆண்டின் கடைசி மாதத்தில் திட்டமிடப்படுவதாகும். இன்றைய சவூதி அரேபியா நாட்டில் அமைந்த மெக்கா மற்றும் மெதினா ஆகிய நகரங்களுக்கு சென்றுவருதலே ஹஜ் பயணம் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.

அந்த நகரங்கள்தான் இஸ்லாமின் தூதர் முகமது, பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த நகரங்கள். மெக்கா நகரில்தான் ‘காபா’ எனப்படும் மிக முக்கிய புனித அடையாளம் அமைந்துள்ளது. முஸ்லீம்கள் தங்களுடைய வழிபாட்டின்போது அந்த காபாவை நோக்கியே திரும்புகிறார்கள்.

இங்கே, பக்ரீத் என்ற சிறப்பு நாள் குறித்து அலசுகையில், அது, து அல் ஹிஜ்ஜாவின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்களில் பலர் தங்களின் புனித ஸ்தலத்திற்கு வருகைதந்து, பண்டைய இறைத்தூதர் இப்ராகிமுடன் தொடர்புடைய நாட்களில் குறிப்பிட்ட சடங்குகளை மேற்கொள்கின்றனர். இதில் தியாகச் சடங்கும் அடக்கம்.

வரலாறு

முஸ்லீம்கள் தங்களுடைய காபாவிற்கு வருகை தருவதன் பின்னணியில் ஒரு வரலாறும் உண்டு. செமிடிக் இறைத்தூதர்களின் தந்தை என்று நம்பப்படும் இப்ராகிம் நபி,

இறைவனது கட்டளையின்படி, தனது இரண்டாவது மனைவி ஹாகர் மற்றும் அவருக்குப் பிறந்த மகனான கைக்குழந்தை இஸ்மாயில் ஆகியோரை சவூதி பாலைவனத்தின் சாஃபா மற்றும் மார்வா குன்றுப் பகுதியில் தன்னந்தனியாக விட்டுவிட்டு நீங்கிவிடுவார்.

குழந்தை இஸ்மாயில் திடீரென தாகத்திற்கு தண்ணீர் கேட்டு அழும். அப்போது செய்வதறியாது தவிக்கும் ஹாகர், குழந்தையை ஓரிடத்தில் தரையில் படுக்கவைத்துவிட்டு, தண்ணீரைத் தேடி இங்குமங்கும் ஓடி அலைவார். எங்கும் தண்ணீரே இருக்காது. அப்போது, தாகத்தால் கதறி அழும் இஸ்மாயில், தனது கால்களை மாறிமாறி தரையில் உதைக்கும்போது, தரைக்குள்ளிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.

பீய்ச்சியடிக்கும் தண்ணீரை அதிசயமாக பார்க்கும் ஹாகர், தனது தாய்மொழியான பாபிலோனிய மொழியில் ‘ஸம் ஸம்’ என்று கூறுவார். அதனால்தான் அந்த நீரூற்று இன்னும் ஸம் ஸம் ஊற்று என்று அழைக்கப்படுவதாக நம்பிக்கை.

இப்படி தண்ணீர் ஊற்றெடுத்த இடம் புனித இடமாக கருதப்பட்டு, அங்கே ஒரு காபாவை கட்டுவிக்க இப்ராகிம் நபியை பணித்தாராம் இறைவன். இதுதான் புனித ஸ்தலத்தின் கதை.

முக்கியத்துவம்

வாழ்வின் ஒருமுறையாவது ஒரு முஸ்லீம் புனிதப் பயணம் செல்வது வலியுறுத்தப்பட்டாலும், வசதி வாய்ப்புள்ளோர் எத்தனைமுறை வேண்டுமானாலும் செல்லலாம்.

சரியான முறையில் சடங்கு சம்பிரதாயங்களை முறையாகப் பின்பற்றி ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தங்களின் வாழ்நாள் பாவங்களிலிருந்து விடுதலையடைவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

உலகெங்கிலும் பல நாடு, இனம் மற்றும் மொழி பேசும் மக்களை ஒரே இடத்தில் ஒற்றுமையாக இணைக்கும் நிகழ்வாக இருக்கிறது புனிதப் பயணம். இங்கே சமத்துவம் ஏற்படுகிறது.

ஹஜ் பயணம் என்பது சமத்துவத்தை மற்றும் தரவில்லை. தங்களின் கடமைகளை முறையாக நிறைவேற்றுவோருக்கு மரணத்திற்கு பிறகு சொர்க்கம் கிடைப்பதற்கான உத்தரவாதத்தையும் தருகிறது என்பது நம்பிக்கை. அன்பு, நேர்மறை எண்ணம் மட்டுமின்றி, ஹஜ் பயணம் என்பது ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மிகவும் உயர்ந்தபட்ச கவுரவம் என்பதும் நம்பிக்கை.