ஒரு முடி வெட்டிய சம்பவம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மட்டுமே போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் உள்ள ITC Maurya ஹோட்டலில் இயங்கும் சலூனில் முடி வெட்டியதில் சேவை குறைபாடு ஏற்பட்டதாக கூறி, ஆஷ்னா ராய் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், ஹோட்டல் நிர்வாகமான ITC Limited மீது தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் (NCDRC) ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ITC நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், “கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு கேட்கும்போது, அதற்கு உறுதியான ஆதாரங்கள் அவசியம்”

“ஊகங்களின் அடிப்படையில் அல்லது மன உளைச்சலை மட்டும் காரணமாகக் கொண்டு பெரும் தொகை வழங்க முடியாது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஆஷ்னா ராய் சமர்ப்பித்த ஆவணங்களில் பல புகைப்பட நகல்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றின் உண்மை தன்மை நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

முடி வெட்டிய பின் வேலை இழந்ததாகவும், மாடலிங் வாய்ப்புகள் பறிபோனதாகவும் கூறியிருந்தாலும், அதற்கான நேரடி, நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால், ஏற்கெனவே ITC நிறுவனம் செலுத்திய ரூ.25 லட்சமே சரியான இழப்பீடு என முடிவு செய்து, அதற்கு மேல் எந்தத் தொகையும் வழங்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் மூலம், “சேவை குறைபாடு நிரூபிக்கப்பட்டாலும், இழப்பீட்டு தொகை ஆதாரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்ற முக்கியக் கருத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?

[youtube-feed feed=1]