கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பெற்றிருக்கும் பெரிய வெற்றியை பார்க்கும்போது, இடதுசாரிகளின் வாக்கு வங்கி, அக்கட்சிக்கு பெரியளவில் இடம் பெயர்ந்திருப்பதைக் காணலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அம்மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், மொத்தம் 18 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது பாரதீய ஜனதா. இந்த வெற்றியை பலரும் அதிசயத்துடன் பேசி வருகின்றனர்.

அதேசமயம், அம்மாநிலத்தில் போட்டியிட்ட 40 இடதுசாரி வேட்பாளர்களில் 38 பேர் தங்களின் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

இதன்மூலம், அவர்களின் வாக்குகள் அப்படியே காவிக் கட்சிக்கு சென்றுள்ளதை அறியலாம் என்கின்றனர் அந்த விமர்சகர்கள். தங்களுடைய வாக்குகளை பாரதீய ஜனதாவுக்கு அளிக்குமாறு இடதுசாரி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மதம் சார்ந்த அரசியலால் பாரதீய ஜனதா பெரிய வெற்றியைப் பெற்றதாக கூறப்படுகிறது. இடதுசாரிகள் பெற்ற வாக்குகள் 8% என்பதாக உள்ளது. வடக்கு வங்கத்தில் பாரதீய ஜனதா வெற்றிபெற இடதுசாரிகள் உதவியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்துமத உணர்வுடன், நகர்ப்புற நடுத்தர வர்க்க மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் காவிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நரேந்திர மோடியை திருடன் என்று அழைத்ததையும் பல வாக்காளர்கள் ரசிக்கவில்லையாம்.