நாகர்கோவில்: மறைந்த வசந்த அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார்  உடல், அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ் வரத்தில், மறைந்த தாய், தந்தையர் அடக்கப்பட்டுள்ள கல்லறை அருகே, நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எச்.வசந்தகுமார், தொற்று குணமான நிலையில், இணைநோய் காரணமாக நேற்றுமுன்தினம் மரணம் அடைந்தார்.

அவரது உடல் திநகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் நேற்ற  பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காமராஜர் அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அதையடுத்து, அவரது  உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திமுக எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி,  நாகர்கோவிலில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

அதையடுத்து  இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.  தொடர்ந்து, வசந்தகுமார் எம்.பி உடல் இறுதி ஊர்வலம்  நடைபெற்றது.  இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவரது உடல் வாகனத்தில் ஏற்பட்டடு கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தில் அவரின் தாய் -தந்தை நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.