சென்னை: பாஜக நிர்வாகி எச்.ராஜா அரசியலில் இருந்தே அகற்றப்பட, புறக்கணிக்கப்பட வேண்டிய தீயசக்தி, அவர் ஒரு மனநோயாளி, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
சமீபத்தில், திரைப்பட இயக்குனர் மோகன் இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை பாஜக மூத்த தலைவரான எச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி மற்றும் பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இந்த படத்தை பார்த்து முடித்தபிறகு செய்தியளார்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டினார். அப்போது செய்தியாளர் ஒருவரின் எடக்குமடக்கான கேள்வியால் ஆவேசமடைந்த ராஜா, பத்திரிகையாளர்கள் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்தார். அத்துடன் சீமான் உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் கீழ்த்தரமாக பேசினார்.
எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் ஏது?” என கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடியின் தமிழ் மொழியை இழிவுபடுத்தும் வகையில் ஆவேசப்பட்டதோடு ஊடகவியலாளர்களைப் பார்த்து “you all media people Presstitues” என மனநோயாளி போல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதோடு பிற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் கீழ்த்தரமாக பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
எச்.ராஜா தான் வகிக்கின்ற பதவிக்கும், வயதுக்கும் உள்ள பொறுப்பை உணராமல் அதனை தட்டிக் கழித்து பத்திரிகையாளர் சந்திப்பு, அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தொடர்ந்து சபை நாகரீகம் இன்றி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜா அரசியலில் இருந்தே அகற்றப்பட, புறக்கணிக்கப்பட வேண்டிய தீயசக்தியாகும்.
மக்கள் மனதில் தொடர்ந்து மததுவேச கருத்துக்களை பதிய வைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜா மீது தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.