அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர்

சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க, இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று. மற்ற மூன்றும் கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பவை.

சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டை வடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை. இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக் கோயிலாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர். 

திருவிழா:

தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, மார்கழி மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.