சென்னை:

குட்கா ஊழல் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அமைச்சர் மற்றும் டிஜிபி மற்றும் உயர்அதிகாரிகளின்  பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்  காரணமாக  எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு உடடினயாக பதவி விலக வேண்டும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டையே உலுக்கிய குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.ஐ) மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. குட்கா ஊழல் வழக்கை குழிதோண்டி புதைக்க அனைத்து சதிகளும் நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கதாகும். இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக 01.04.2016 முதல் 15.06.2016 வரையிலான இரண்டரை மாதங்களில் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா நிறுவனம் ரூ.56 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டதற்கும், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சியின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கும் ரூ.60 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித் துறை நடத்திய ஆய்வுகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெரிய வந்தது.

அப்போதிலிருந்தே இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இப்போது இதுதொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் இவ்விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் வழக்கை மூடி மறைப்பதற்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்ட சதிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. 2016ஆம் ஆண்டில் குட்கா ஊழல் குறித்த ஆதாரங்களை வருமானவரித்துறையினர் தலைமைச் செயலாளரிடமும், காவல்துறை தலைமை இயக்குனரிடமும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ஒப்படைத்தனர்.

அப்போது தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் அந்த ஆதாரங்களை பதுக்கி வைத்த நிலையில், காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமாரும், காவல்துறை தலைவரும், சி.பி.ஐயில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான அருணாச்சலமும் இது குறித்த விசாரணைகளை தீவிரப் படுத்தினார்கள்.

இதனால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், காவல்துறை தலைமை இயக்குனர் அசோக்குமாரை ஆட்சியாளர்கள் மிரட்டி பதவி விலக வைத்தனர். அதேநாளில் சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம் மாற்றப்பட்டு முக்கியத்துவமில்லாத பதவியில் அமர்த்தப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கை வலுவிழக்கச் செய்யும் பணிகள் தொடர்ந்தன. இவ்வழக்கின் விசாரணையை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட மூத்த இ.ஆ.ப அதிகாரி ஜெயக்கொடி அடுத்த சில மாதங்களில் மாற்றப்பட்டு மோகன்பியாரே நியமிக்கப் பட்டார்.

அதன்பிறகும் இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த முயன்ற கையூட்டுத் தடுப்புப்பிரிவின் இயக்குனர் மஞ்சுநாதா கடந்த சில நாட்களுக்கு முன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, காலக்கெடு முடிவடைந்த பிறகும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, விஜயபாஸ்கருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தும் வழக்கில் அவர் சேர்க்கப்படவில்லை.

ஒரு வழக்கின் விசாரணையை சிதைக்க இந்த அளவுக்கு சதிகள் நடைபெற்றிருப்பதிலிருந்தே இந்த வழக்கின் பின்னணி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 3 முதலமைச்சர்களும் முயன்றனர். இதை எவரும் மறுக்க முடியாது. இப்போது இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டிருப்பதன் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் வழக்கில் தமிழக காவல்துறை விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்பதாலும், இந்த வழக்கின் விசாரணையை சீர்குலைக்க தமிழக ஆட்சியாளர்கள் சதி செய்தனர் என்பதாலும் தான் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசு மீது நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது என்பது ஒருபுறமிருக்க, பினாமி ஆட்சியாளர்கள் தொடர்ந்து பதவியில் இருந்தால் இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முட்டுக்கட்டைப் போட வாய்ப்புள்ளது. எனவே, குட்கா ஊழல் வழக்கின் விசாரணை தடையின்றி நடைபெற வசதியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு பதவி விலக வேண்டும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.