சண்டிகர்:

பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் உள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தாக் கமிட்டியை சீக்கிய மத குருமார்கள் பராமரித்து வருகிறார்கள். இங்கு லங்கர் எனப்படும் இலவச உணவு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. சதாரண நாட்களில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த சமுதாய சமையல் அறையில் முழுக்க முழுக்க சைவம் மட்டுமே அதிகளவில் சமைப்பது உலகளவில் இங்கு மட்டுமே.

ஜிஎஸ்டி மூலம் இந்த இலவச உணவு வழங்கும் சேவைக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து குருத்வாரா செய்தி தொடர்பாளர் தில்ஜித் சிங் பேடி கூறுகையில், ‘‘கடந்த ஜூலை 31ம் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி திட்டம் மூலம் ஜனவரி 31ம் தேதி வரை ரூ. 2 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது.

பொற் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர குருத்வாராக்களில் உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது இந்த வரி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள குருத்துவார் ஸ்தலங்களில் தினமும் லட்சகணக்கான மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

இதற்கு நூற்றுக்கணக்கான டன் கோதுமை மாவு, நெய், மசாலா பொருட்கள், காய்கறி, பால், சர்க்கரை, அரிசி, லட்சகணக்கான லிட்டர் தண்ணீர் சமையலுக்காக ஆண்டுதோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக ரூ. 75 கோடி செலவிடப்படுகிறது. இந்த பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமர், நிதியமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது’’ என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து அருண்ஜெட்லி கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்ள குருத்வாரா லங்கர்களில் உணவு விநியோக திட்டத்துக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த அறிவிப்பு குருத்வாரா நிர்வாகத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது. ‘‘விற்பனை செய்யப்படும் பொருளுக்கு தான் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். ஆனால் குருத்வாராவில் உணவு இலவசமாக தான் வழங்கப்படுகிறது’’ என்று குருத்வாரா தலைவர் கோபிநாத் சிங் லாங்வால் தெரிவித்துள்ளார்.