சென்னை,
ஈழத்தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தை பாய்ச்சியது.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 21-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மெரினா கடற்கரையில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
சமீபத்தில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக பிட் நோட்டீஸ் விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.