சென்னை:

றந்த கொரோனா நோயாளிகளின் உடல் அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர  போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் உடலை இடுகாட்டில் புதைக்கவிடாமல் தடுத்து, தாக்குதல் நடத்திய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. அகில இந்திய மருத்துவர்கள் சங்கமும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று  காலை சென்னை தண்டையார்பேட்டையில் கொரானோ பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது பற்றி மாநகராட்சி கமிஷனர் கோ. பிரகாஷ்  ஆய்வில் ஈடுபட்டார்.  அவருடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மாநகர காவல்ஆணையர்  ஏ.கே. விஸ்வநாதன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

சென்னையில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயரிழந்த டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தது மனித நேயமற்ற செயல். அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கொரானோவால் இறந்தவர் உடலில் இருந்து கொரோனா தொற்றுப் பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.  அடக்கம் செய்யும் இடத்தில் அந்தத் தொற்று பரவுவதற்கு வாய்ப்பில்லை.

இனி இது போன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது தடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்சமாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

டாக்டர் உடலை அடக்கம் செய்யும்போது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் தேடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.