லாஸ் வேகாஸ்:

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 406 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் உள்ள மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் மைதானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பீதியடைந்த மக்கள் சிதறி ஓடினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 406 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது.

ஆனால். இந்த தாக்குதலில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை என்று ஃஎப்பிஐ தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஸ்டீபன் பட்டாக் என்பவன் மட்டுமே ஈடுபட்டுள்ளான். அவனையும் போலீசார் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவனது அறையில் இருந்து 8 எந்திர துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவன் எதற்காக தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவனது தோழியை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.