திருவள்ளூர் :

கொரோனா ஊரடங்கு காரணமாக மத வழிபாட்டு தலங்கள் மூட உத்தரவிடப்பட்ட நிலையில், தடையை மீறி கும்மிடிப்பூண்டி பகுதியில் திறக்கப்பட்ட தேவாலயத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி மேட்டுக் காலணி பகுதியில் இன்று புனித வெள்ளி பிரார்த்தனை நடத்த  ஆலயத்தை நிர்வகித்து வரும் பாஸ்டர் துரை என்பவர், சர்ச்சை திறந்து வழிபாடு நடத்தினார். இந்நிலையில் புனித வெள்ளியை ஒட்டி இந்த தேவாலயத்தில் வழிபாட்டை பாஸ்டர் துரை நடத்தியதாகவும் அதில் சுமார் 20 பேர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி காவல்துறைக்கு புகார் பறந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார் அந்த தேவாலயத்துக்கு சீல் வைத்தார்.