தூத்துக்குடி: மன்னார் வளைகுடாப் பகுதியில் 62 புதியவகை உயிர்களையும், 77 புதிய ஒட்டுப்பாறை பகுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக, மன்னார் வளைகுடாப் பகுதியில் கண்டறியப்பட்ட உயிர் வகைகளின் எண்ணிக்கை 4223 என்பதிலிருந்து, 4285 என்பதாக உயர்ந்துள்ளது.
பொதுவாக, மன்னார் வளைகுடாவின் வடக்குப் பகுதியில்தான் அதிக ஆய்வுகள் நடைபெறும். தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இடைபட்ட பகுதிதான் இந்த வடக்குப் பகுதி. ஆனால், தற்போதைய ஆய்வு அந்த வளைகுடாவின் தென்பகுதியையும் உள்ளடக்கியது. தென்பகுதி என்பது தூத்துக்குடிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைபட்டது.
இந்த ஆய்வின்மூலம் கடலுக்கடியில் நிலவும் பல்லுயிர்ச் சூழல் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் வளைகுடாவின் வடக்குப் பகுதி ஆழம் குறைவானது மற்றும் குட்டித் தீவுகளை உள்ளடக்கியது. ஆனால், தென்பகுதி அதிக ஆழமும் பல ஆச்சர்ய அம்சங்களும் கொண்டது என்று தெரிவிக்கின்றனர்.