டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை மாலை  வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த புதிய புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குலாப் புயல் தற்போது,  மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது  26ம் தேதி காலை  வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும், கடலோர மாவட்டங்கள், கடலூர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் உள்மாநிலங்களிலும் இதன் காரணமாக அதிக அளவில் மழை கிடைக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலாப் புயலைத் தொடர்ந்து கடலூர் , காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.