காந்தி நகர்
சட்டவிரோதமாகக் குஜராத்தில் இருந்து அமெரிக்கா செல்ல பயணிகள் ரூ.60 லட்சம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு கடந்த வாரம் சென்று கொண்டு இருந்த விமானம் எரிபொருள் நிரப்ப பிரான்ஸின் வத்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தினர். விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனச் சொல்லப்பட்டது.
பயணிகளிடம் சுமார் 4 நாட்கள் வரை விசாரணை நடத்தியதில் அது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் என்பது தெரிய வந்தது. இதுபோன்ற விமானத்தைக் கழுதை விமானம் என்பார்கள். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு விமானம் கிளம்ப அனுமதி தரப்பட்டது. சுமார் 276 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு வந்து இறங்கியது.
அந்த விமானத்தில் இருந்த 27 பேர் பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாகத் தங்க அடைக்கலம் கோரியதாகத் தகவல் வெளியானது. தற்போது இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானத்தில் இருந்தவர்களில் 60க்கும் மேற்பட்டோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இம்மிகிரேஷன் ஏஜெண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் முதல் ரூ, 80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அந்த ஏஜெண்டுகள் லத்தீன் அமெரிக்க நாடான நிகரகுவாவில் இருந்து இவர்களைச் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல இருந்தனர்.
குஜராத் அதிகாரிகள்,
“அவர்களில் சில மைனர்கள் உட்பட 66 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 66 பேரும் இப்போது ஏற்கனவே தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மெஹ்சானா, அகமதாபாத், காந்திநகர் மற்றும் ஆனந்த் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
அவர்களில் 55 பேரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினோம் பெரும்பாலோர் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளனர்.. சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவ அவர்கள் அங்குள்ள உள்ளூர் இம்மிகிரேஷன் ஏஜெண்டுகள் ரூ. 60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
துபாய் வழியாக நிகர குவாவுக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதே அவர்கள் திட்டமாக இருந்தது. இந்த 55 பேரும் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு பணத்தை வழங்கினால் போதும் எனச் சொல்லியுள்ளனர்.
தங்கள் ஆட்கள் நிகரகுவாவில் இருந்து அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதாகவும், பின்னர் எல்லையைக் கடக்க உதவுவதாகவும் ஏஜெண்டுகள் உறுதி அளித்துள்ளனர். அந்த ஏஜெண்டுகள் தான் இவர்களின் டிக்கெட், விசா என அனைத்தையும் பதிவு செய்துள்ளனர். எதிர்பாராத விதமாக எதாவது நடந்தால் அதைச் சமாளிக்கவும் 1,000 முதல் 3,000 டாலர்களை கொடுத்துள்ளனர்”
என்று தெரிவித்துள்ளனர்.