அகமதாபாத்: மக்கள் விரோத மத்திய, மாநில பாஜக தலைமைக்கு குஜராத் மாநில மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நவராத்திரி பண்டிகையின்போது ஆடிப்பாடும் கர்பா நடனத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை கண்ட பாஜக தலமை ஷாக் ஆகி திகைத்துள்ளது.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை 9 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை, பிரதமர் மோடியின் சொந்தமான குஜராத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களின் இரவுகளும் குஜராத் மாநில மக்கள் துர்காவுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமான நிகழ்வாகும்.

இந்த   ஒன்பது நாட்களும் ஒன்பது  சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டு, குஜராத்தி மக்கள், கர்பா பாடல்களுடன் நடனம் ஆடி வழிபாடு நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதன்படி தற்போது நடைபெற்று வரும் நவராத்தி பண்டிகையின்போது, குஜராத் மக்கள், மத்திய, மாநில பாஜக அரசின் மக்கள் விரோதப்போக்கை விமர்சிக்கும் வகையில் கர்பா நடனம் ஆடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

குஜராத்தில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல மத்தியிலும் மோடி தலைமையில் பாஜக ஆட்சிநடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1000ஐ நெருங்கி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டர் ரூ.100ஐ கடந்துவிட்டது. இதனால், இல்லத்தரசிகளும், சாமானிய மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, இன்னும் மக்களின் இயல்புவாழ்க்கை முழுமையாக திரும்பாத நிலையில், அதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத மோடி அரசு, அத்தியாவசிய தேவைகளான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை மேலும் கஷ்டத்துக்குள் தள்ளியுள்ளது. இதனால், பொதுமக்கள், மோடி அரசு மீது கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பொதுமக்கள் மத்திய, மாநில பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பதை, தங்களது நவராத்திரி கர்பா நடனம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

கர்பா நடனத்தின்போது, பொதுமக்கள், எரிவாயு சிலிண்டர்களையும், பெட்ரோல், டீசல்கள் பாட்டில்களை  தலையில் வைத்துக் கொண்டும், எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாதைகளுடன்  நடனமாடி, வித்தியாசமான முறையிலும், அதே வேளையில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் வகையிலும் நடனமாடி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கண்ட குஜராத் மாநில பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து உள்ளது.

குஜராத், உ.பி. உள்பட 5 மாநிலங்களில் 2022ம் ஆண்டு முன்பகுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், சமீபத்தில் மாநில முதல்வர் விஜய் ரூபானியை மாற்றிய பாஜக தலைமை, மாநில பாஜகவிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவில் மிதந்து வரும் மாநில மற்றும் மத்திய பாஜகவுக்கு, சாவுமணி அடிக்கும் வகையில், குஜராத்திகள் கர்பா நடனம் மூலம் தங்களது எதிர்ப்புகளை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளனர்.

மாநில மக்களின் எழுச்சியால், மாநில பாஜக மட்டுமல்லாமல் மத்திய பாஜகவுக்கும் ஆடிப்போயுள்ளது.