கமதாபாத்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் குஜராத் உணவக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.   ஒரு சில மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.   இதையொட்டி பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்றாக உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயத்தால் நாடெங்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இந்நிலையில் குஜராத் ஒட்டல் மற்றும் உணவக சங்கத் தலைவர் நரேந்திர சோமானி விடுத்துள்ள அறிகையில், “கொரோனா பரவல் இன்னும் பல இடங்களில் தீவிரமாக உள்ளது.  மேலும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு விரைவில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே உணவகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  வாடிக்கையாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியாவது போட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  தற்போது திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.