காந்திநகர்

ரடங்கு காரணமாகக் குஜராத் மாநில வருவாய் மிகவும் குறைந்துள்ளதாக அம்மாநில துணை  முதல்வரும் நிதி அமைச்சருமான நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது   இதனால் நாட்டில் அனைத்து மாநிலங்களில் தொழிலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பணிகளும் மே 17 வரை இயங்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தனி மனித வருவாய் மட்டுமின்றி அரசு வருவாயும் குறைந்துள்ளன.

இது குறித்து குஜராத் மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான நிதின் படேல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அந்த பேட்டியில் நிதின் படேல், “ஊரடங்கு மாநில வருவாயை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது.  குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநிலத்தின் வாட் வருவாய் முழுவதுமாக நின்று போனது.  தற்போது சரக்கு வாகனங்களும் இயங்குவதில்லை.  மாநிலத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கும் ரூ.4000 கோடி வருவாய் ஊரடங்கால் குறைந்துள்ளது.

இதைப் போல் தொழிலகங்கள், வர்த்தகம் ,மற்றும் சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து ஜி எஸ் டியின் கீழ் வரும் வர்த்தக நடவடிக்கைகளும் அடியோடு நின்று போயின.   இதனால் மத்திய மாநில அரசுகளுக்குப் பெருமளவில் கிடைத்து வந்த வருவாய் நின்று போனது.   இது சுமார் ரூ.5000 கோடி வருமான இழப்பாகும்.   இதே அளவு இழப்பு மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மாநில அரசுகள் நிவாரணமாக ஏராளமான செலவு செய்து வருகிறது.  இவை அனைத்தும் வருவாய் இல்லாத நேரத்தில் உண்டாகும் எதிர்பாராத செலவுகள் ஆகும்.  இலவச ரேஷன். மின்கட்டணம் செலுத்த அவகாசம், சுங்கக் கட்டண தள்ளுபடி உள்ளிட்டவைகளால்  மாநிலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளன.  இதைத் தவிர தொழிலகங்கள் இயங்காததால் அவற்றில் இருந்து வரும் மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம், வாகன வரி போன்றவையும் முழுமையாக நின்றுள்ளன.

இதனால் புதிய சாலைகள் அமைத்தல், அரசு கட்டிடம் கட்டுதல், பல அரசுத் திட்டங்கள் ஆகியவற்றை தற்போது ரத்து செய்துள்ளோம்.  இந்த மாநில மேம்பட்டு நடவடிக்கைகள் நிலைமை சீரான பிறகே மீண்டும் தொடங்கும் நிலை உள்ளது.   மேலும் பல நடவடிக்கைகள் மாநிலத்தின் பொருளாதார நிலை முழு அளைவ்ல் சீரான பிறகே தொடங்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் பொருளாதார சிக்கல் என்பது எங்களுக்கு மிகவும் பெரிய சவாலாக உள்ளது.  அரசு செலவைக் கட்டுக்குள் கொண்டு வந்து கூடியவரை வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதனால் ஊதிய குறைப்பு போன்ற இன்றியமையாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% குறைக்கப்பட்டுள்ளது.  விரைவில் மேலும் விரிவன திட்டங்கள் அறிவிக்கப்படும்.

தற்போதுள்ள நிலையில் தொழிற்சாலை மற்றும் சேவை மையங்களுக்கு எவ்விதத்தில் நிவாரணம் அளிப்பது என்பது குறித்துத் தெரிவிக்க இயலாமல் உள்ளோம். நாங்கள் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்மையாகக் கவனித்து வருகிறோம், ஏற்கனவே ஒரு சில முக்கிய நடவடிகைஅக்ளை தொடங்கி உள்ளோம்.  ஊரடங்கு முடிவடைந்த பிறகு உள்ள நிலையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகளைச் செய்ய உள்ளோம்.

பிரதமர் மோடியின் தலைமையில்  இயங்கும் மத்திய அரசு குஜராத் மாநில தேவைகளை நன்கு கவனித்து வருகிறது.  எனவே சிறப்பு உதவிகள் எதுவும் தேவை இல்லை. என்பதால் குஜராத் அரசு மத்திய அரசிடம்  சிறப்பு உதவிகள் எதையும் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.