கமதாபாத்

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பப் பணம் செலுத்தத் தேவை இல்லை என பாஜக கூறி வருவதற்கு மாறாகக் குஜராத் மாநிலத்தில் ரயில் டிக்கட் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

ஊரடங்கால் பல வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பணி செல்லும் ஊரில் சிக்கினார்கள்.  அவர்களுக்குப் பணி இல்லாத நிலையில் உணவுக்கும் உறைவிடத்துக்கும் திண்டாடி வந்தனர்.   ஒரு சிலருக்கு அரசு முகாம்களில் தங்கவும் இலவச உணவுக்கும் வாய்ப்பு கிடைத்தது.   தற்போது ஊரடங்கு இரண்டாம் முறையாக மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அரசு வெளி மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் மற்ற மாநில அரசு அனுமதியுடன் சொந்த ஊருக்கு அனுப்பலாம் என உத்தரவு பிறப்பித்தது.   அதையொட்டி இந்திய ரயில்வே இடை நில்லா சேவைகளை அறிவித்தது.  இந்து குறித்து பாஜகவினர் ரயில் டிக்கட் கட்டணத்தில் 85% மாநில அரசு அளிக்கும் எனவும் 15% ரயில்வே அளிக்கும் எனவும் தெரிவித்தனர்.  ஆனால் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்திலேயே அது நடைபெறாமல் இருந்துள்ளது.

தற்போது குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேசம், ஒரிசா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குச் சிறப்பு இடைநில்லா ரயில்கள் விடப்பட்டன. இந்த ரயில்கள் அகமதாபாத், சூரத்  மற்றும் வடோதரா  நகரங்களில் இருந்து கிளம்பி உள்ளன.  இதில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து டிக்கட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகம் பேசாமல் இருந்த பாஜகவினர்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏழை மக்களின் டிக்கட் கட்டணத்தைக் காங்கிரஸ் அளிக்கும் என அறிவித்ததால் மாட்டிக் கொண்டுள்ளனர்.    அதைச் சமாளிக்க சோனியா காந்தி தவறான தகவல் அளிப்பதாகவும் தங்கள் கட்சியின் புகழைக் கெடுக்க அவர் இவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தனர்.   ஆனால் ரயிலில் பயணம் செய்தவர்கள் தாங்கள் கட்டணம் செலுத்தியதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.ம்

உத்தரப்பிரதேசம் பாராபான்கி கிராமத்தைச் சேர்ந்த மோகன்லால் என்பவர் தமது கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு  கடந்த ஆறு வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை எனினும் தாங்கள் ஊர் திரும்ப ஒவ்வொருவரும் ரூ .480 அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.    மேலும் ரயிலில் தங்களுக்குக் குடிநீர் வழங்காததால் பல மணி நேரம் தவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் டிக்கட்டுக்கு பணம் இல்லாததால் தாம் ஒரு பால்காரரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியதாகவும் கூறி உள்ளார்.

பீகாரை சேர்ந்த விஜய்குமார் என்பவர், “நான் நிதிஷ்குமாருக்கு வாக்களிக்கப் பீகாருக்கு சென்றேன்.  அப்போது ரயிலில் எனக்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டது.  இலவச டிக்கட், உணவு என அனைத்தும் வழங்கப்பட்டது.   ஆனால் தற்போது தினமும் நான் இப்போது ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறேன். பீகார் மாநிலம் குஜராத்தில் இருந்து வருவோரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என அறிவிக்கப்படுகிறது’ எனக் கூறி உள்ளார்.

ஒரிசாவை சேர்ந்த தேபாசிங், தாமும் தமது நண்பர்களும் ரயிலில் சென்றதால் டிக்கட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி ஆர் பாடில் மற்றும் நவசாரி ஆகியோர் இலவச பேருந்துகளை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.   அத்துடன் அவருக்கு தெரிந்த யாரும் அந்த பேருந்துகளில் செல்லாததால் அனைவருமே கட்டணம் செலுத்தி ரயிலில் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் பாஜக தலைவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.  அவர்கள் இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் இன்னும் 3 மணி நேரத்தில் விளக்கம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.  ஆனால் செய்தியாளர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

டில்லியை சேர்ந்த ஒரு மூத்த அரசு அதிகாரி, “ஏற்கனவே நாங்கள் அனைத்து மாநில அரசுகளுக்கும் டிக்கட் கட்டணத்தை அரசு வெளி மாநில தொழிலாளர்களிடம் இருந்து வசூலித்து ரயில்வேக்கு  அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.  இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் வெளி மாநில தொழிலாளர்களின் பயணக் கட்டணத்துக்காக என மாநில அரசுகளுக்கு நிதி அளித்துள்ளன.   பீகார் மாநில காங்கிரஸ் இது குறித்து வேண்டுகோள் விடுத்ததற்கு நிதிஷ்குமார் அரசு வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை மீண்டும் மாநிலத்துக்கு அழைத்து வர ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.