காந்திநகர்
மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீட்டு சட்டத்தை குஜராத் அரசு இன்று முதல் அமுல்படுத்துகிறது.
பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே ஒப்புதல் பெறப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கீகரித்ததை அடுத்து தற்போது சட்டமாகி உள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் வருடம் அப்போதைய முதல்வர் ஆனந்திபென் கொண்டு வந்தார். அப்போது படேல் இனத்தவர் இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை விடுத்ததை ஒட்டி இந்த சட்டம் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.
ஆயினும் அதே வருடம் குஜராத் உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. அர்சியலமைப்பு சட்டத்தின் படி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தெரிவித்டிருந்தது. அத்துடன் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒரு மாநிலம் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
தற்போது மத்திய அரசு இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீட்டு சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த சட்டத்தை அமுலாக்கிய முதல் மாநிலம் குஜராத் மாநிலம் ஆகும்.