அகமதாபாத்
குஜராத் உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் குறித்து கண்டனம் தெரிவித்ததால் அம்மாநிலத்தில் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலையோ என அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் தினசரி பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இங்கு இதுவரை 3.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4,855 பேர் உயிர் இழந்து தற்போது 30.680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையொட்டி குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மிகவும் மோசமாகியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த சில மணி நேரங்களில் குஜராத் அரசு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார். அந்த உரையில் அவர், “அரசு இரவு பகல் பாராமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் பாடுபடுகிறது. அனைத்து துறைகளையும் தற்போதைய சூழலில் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன்.
அரசு அனைத்து சமூக மற்றும் மத நிகழ்வுகளுக்கு உடனடியாக தடை விதிக்கிறது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பண்டிகை நிகழ்வுகளுக்கும் அனுமதி கிடையாது என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தினசரி அரசு அலுவலகங்கள், ஆணையங்கள், உள்ளிட்டவற்றில் பணி புரிவோரில் 50% மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த நாள் மீதமுள்ள 50% ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் வரும் ஏப்ரல் 30 வரை முழுவதுமாக மூடப்படுகின்றன.
கொரோனா சிகிச்சைக்காக 3.25 லட்சம் ரெம்டிசிவிர் மருந்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த மருந்தின் தேவை மேலும் அதிகரித்தால் மிகவும் கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதில் முன்னுரிமை முதலில் அரசு மருத்துவமனைகளுக்கும் பிறகு தனியர் மருத்துவமனைகளுக்கும் அளிக்கப்படும்.
தினசரி சுமார் 35000 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளன. இதற்காக 13 மாவட்டங்களில் சோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தினசரி சுமார் 25000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. ” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]