குஜராத்:
ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறந்தபாடில்லை. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனிடையே பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்றும் அதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா அண்மையில் தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத்தில் ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தை பொறுத்தவரை இன்று புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 370 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.