மோடிக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அளுநர்

Must read

பெங்களூரு

முன்பு தமது  குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பிரதமர் மோடிக்காக ராஜினாமா செய்தவர் தற்போதைய கர்நாடக ஆளுநர் ஆவார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் பாஜக அதை மறுத்துள்ளது. தற்போது காங்கிரஸ் உறுப்பினர் 13 பேர் மற்றும் மஜத உறுப்பினர்கள் மூவர் என மொத்தம் 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இவர்கள் ராஜினாமாவை கர்நாடக சபாநாயகர் ஏற்கவில்லை.

கர்நாடக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கர்நாடக ஆளுநர் நேற்று மாநில அரசுக்கு இரு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஜுபாய் வாலா குஜராத் அமைச்சரவையில் நிதி அமைச்சராக 18 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்தவர் என்னும் பெருமை கொண்டவர் ஆவார். தற்போது 79 வயதாகும் வஜுபாய் வாலா குஜராத் மாநில பாஜகவின் உள்ள பல குழப்பங்களை தீர்த்து வைத்தவர் ஆவார். குஜராத்தில் சங்கர்சிங் வாகேலா கடந்த 1990 களின் இடையில் எதிர்ப்பு கிளப்பிய போது இவர் மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார்.

கேசுபாய் படேல் அரசு கவிழ்ந்த போது 2001 ஆம் வருடம் மோடி குஜராத் முதல்வரானார். அப்போது அவர் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை என்பதால் அவர் ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது மோடிக்கு பாதுகாப்பான தொகுதியாக அகமதாபாத் நகரின் பால்தி தொகுதி கண்டறியப்பட்டது. ஆனால் அந்த தொகுதி உறுப்பினர் ஹரேன் பாண்டியா ராஜினாமா செய்ய மறுத்தார்.

அப்போது மேற்கு ராஜ்கோட் தொகுதியின் உறுப்பினராக இருந்த வாஜுபாய் வாலா தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மோடிக்காக ராஜினாமா செய்தார். முதன்முறையாக அந்த தொகுதியில் நின்று மோடி வெற்றி பெற்றார். மோடி பிரதமர் ஆனதும் வாஜுபாய் வாலா குஜராத் முதல்வராவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆனந்தி பென் குஜராத் முதல்வரானார். வாஜுபாய் வாலா கர்நாடக ஆளுநர் ஆனார்.

More articles

Latest article