மெஹ்சானா
குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/
விபுல் சவுத்ரி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டது.
மெஹ்சானா ‘பி’ பிரிவு காவல் நிலையத்தில் விபுல் சவுத்ரிமீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் மாட்டுத் தீவன மோசடி குற்றம் சாட்டப்பட்டதால் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நேற்று மெஹ்சானாவின் கூடுதல் தலைமை ஜூடிசியல் நீதிபதி ஒய் ஆர் அகர்வால் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420-ன் கீழ் சவுத்ரி மற்றும் 14 பேரைக் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இன்று விபுல் சவுத்ரிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துத்சாகர் டெய்ரியின் முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முன்னாள் துணைத் தலைவர் ஜலபென் தாக்கூர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குநர் நிஷித் பாக்ஸி ஆகியோருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.