காந்திநகர்:
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக, குஜராத் மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஏற்கனவே .உபி. மாநில பாஜக அரசு, அனைத்து 1 முதல் 9 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குஜராத் மாநில பாஜக அரசும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1முதல் 9 ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் .உபி. மாநில அரசு இதுபோல அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.