Gujarat-based family bids Rs 33.5 crore to light funeral pyre of Jain monk

 

எதுஎதெற்கோ ஏலம் விடப்படுவதையும், அதைப் பல கோடி ரூபாய் கொடுத்து எடுக்கும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இறுதிச் சடங்கு செய்யும் உரிமையை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கும் புதுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லை… நமது ராஜஸ்தானில்தான்!

 

ராஜஸ்தான் மாநிலம் பாண்டவபுரத்தில் வசித்துவந்த ஜைனத் துறவியான ஜெயந்த் சன் சூரிஸ்வார்ஜி மகராஜ் சாஹேப் கடந்த திங்கள் கிழமை காலமானார். தகவலறிந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜைன சமூகத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் பணக்காரர்கள் ஆவர்.

 

இந்நிலையில், காலமான ஜைனத் துறவி ஜெயந்த்சன் சூரிஸ்வார்ஜியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றும் உரிமை, ஏலத்தில் விடப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ஜைனத்துறவியின் சிதைக்கு தீ மூட்டும் உரிமையை மட்டும் ரூ33.5 கோடிக்கு ஏலம் எடுத்தார். இதேபோல், இறுதிச் சடங்கின் போது நிறைவேற்றப்படும் ஒவ்வொரு சடங்கிற்கான உரிமைகளையும் மேலும் சிலர் ஏலத்தில் எடுத்தனர். இப்படியாக, ஜைனத் துறவிக்கு இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதற்கான உரிமை மொத்தம், ரூ57 கோடிக்கு ஏலம் போனது!

 

ஆடம்பரமான கம்பளி சால்வையால் போர்த்தப்பட்ட ஜைனத்துறவியின் உடல், வழி நெடுக சந்தனம் தூவப்பட்ட பாதையில் எடுத்துச் செல்லப்பட்டு ஆடம்பரமான பல்வேறு சடங்குகளுடன் எரியூட்டப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஜைன மதத்தை பறப்புவதற்காக ஜைன துறவிகள் இறக்கும் போது, அவர்களது இறுதிச் சடங்கு செய்யும் உரிமையை யாருக்காவது ஏலத்தில் விடுவது வழக்கத்திற்கு வந்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜைன துறவி ஒருவர் கூறியுள்ளார். இந்த வழக்கமே, தற்போது கட்டாயமான சடங்காக மாறியதுடன், கோடிக்கணக்கில் ஏலத்திற்கு எடுக்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

வாழ்வதற்கே வழியில்லாமல் கோடான கோடி மக்கள் தவிக்கும் நாட்டில், இறுதிச் சடங்குக்கு இத்தனை செலவா என நமக்குத் தோன்றலாம். அவர்கள் இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்களோ!