காந்திநகர்: குஜராத்தில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  மந்தமான நிலையிலேயே  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில், இன்று (1-ந்தேதி) முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். பெண்கள் ஓட்டுபோட அதிக ஆர்வம் காட்டினார்கள். இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.  காலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மதிய நேரத்தில் டல்லடிக்கத் தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி  வாக்குப்பதிவு 4.92 சதவிகிதமா இருந்த நிலையில்,  11 மணி நிலவரப்படி 18.95 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இன்னும் இரண்டு மணி நேரத்தில் (5மணி) வாக்குப்பதிவு முடிவுபெற உள்ள நிலையில், 50 சதவிகித வாக்குகளே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.