காந்திநகர்: குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தலைமையில் 24 பேர் கொண்ட புதிய அமைச்சவை இன்று பதவி ஏற்றது.
குஜராத் மாநில பாஜக முதல்வராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி, கடந்த 11ஆம் தேதி திடீரென பதவி விலகினார். இதையடுத்து, புதிய முதல்வர் மந்திரி பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. ஆனால், புதிய முதல்வராக, துணைமுதல்வராக இருந்த பூபேந்திர பட்டேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் மாற்றம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் கடந்த 13ந்தேதி பதவி ஏற்றார்.அப்போது அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்காக, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. காந்திநகர் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் ல் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களில் 10 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 14 பேருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில், ஏற்கனவே விஜய் ரூபானி அமைச்சரவையில் இருந்த யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. மேலும் மாநில சட்டமன்றத்தில் அவைத் தலைவராக இருந்தவர் ராஜேந்திர திரிவேதிக்கு பதவி கிடைத்துள்ளது. குஜராத் மாநில பாஜக முன்னாள் தலைவராக இருந்த ஜீத் வாகனே தற்போது கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.