சென்னை: கூடுவாஞ்சேரி – பரனூர் இடையே 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பிரதான சாலையாக சென்னை செங்கல்பட்டு சாலை திகழ்ந்து வருகிறது.   செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  சில மைல் தூரம் கடக்கவே  காலையிலும் மாலையிலும் சில மணி நேரங்கள் செலவிடப்பட வேண்டிய நிலை உள்ளது. விடுமுறைக்காலங்களில் பரனூர் சுங்கச்சவாடியை கடப்பதற்குள் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதேபோல் அதிகாலையில் வருவதற்கும் படாத பாடு பட வேண்டியுள்ளது.
இதையடுத்து,  சென்னையில்  தெற்கு நுழைவாயிலாக உள்ள தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான சாலையை 8 வழிச்சாலையாக்கத்  தமிழகஅரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
முதற்கட்டமாகப் பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையுள்ள பகுதியில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், அடுத்த கட்டமாகக் கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரையிலான 13 கிலோமீட்டர் நீளத்துக்கு 8 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
250 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்துச் சாலைப் பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றுவது குறித்து மின்வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.
8 வழிச்சாலைப் பணிகளை முடிக்க ஓராண்டு ஆகும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.