சென்னை: கொரோனா முடக்கம் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் படிப்பிலும் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா காரணமாக, பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கும் நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணைகளின்போது,  அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநிலஅரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும் யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில்தான் அதில்பிரச்சினை ஏற்படும். ஆனால் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் யுஜிசியின் விதிமுறைகள் மீறப்படவில்லை” என வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து , யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். அதன்படி கடந்த விசாரணையின்போது, ஏஐசிடியி தாக்கல் செய்த பதில் மனுவில், அரியர் தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.  அதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக  அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் உயர்கல்வி அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதில் அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு தனது முடிவை பின்வாங்கப்போவதில்லை என்றும்,  அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.