சென்னை,

மிழக சட்டசபையில் இருந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்றும் வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டசபை விவாதத்தின்போது, குட்கா குறித்து பேச எதிர்க்கட்டசி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து அவர் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன், சபையை விட்டு வெளியேறினார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற குட்கா ஊழல் விவகாரத்தில், அதிகாரி மாற்றப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் பேச முற்பட்டார். ஆனால், அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், அதிகாரிகளை மாற்றுவது அரசின் உரிமை என கூறினார்.

இதனைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின்போது,  தடை செய்யப்பட்ட பான் மாலா,  :’குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்கள்  தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக,  விற்பனையாளர்க ளிடம், ரூ.40 கோடி வரை  லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சட்டமன்றத்தில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி, இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது, அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, இந்த விவகாரத்தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது எனக்கூறினார்.

அதைத்தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் சிலர் குட்காவை சட்டமன்றத்திற்குள் எடுத்துச்சென்ற சபாநாயகரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்,  தடைசெய்யப்பட்ட குட்காவை சட்ட மன்றத்திற்குள் கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதையடுத்து சபாநாயகர் குட்கா விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குட்கா ஊழல் குறித்து விசாரணை நடத்தி வந்த அதிகாரி  ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி நேற்று திடீரென மாற்றப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய ஸ்டாலின், குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்றுவதற்காகவே ஜெயக்கொடி மாற்றப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.