சென்னை:

டந்த மாதம் கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை மற்றும் குடோன் கண்டு பிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில்  போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த குடோன் இருப்பது தெரிய வந்தது. இதில் ரூ. 50 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதை  காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் லஞ்சம் கொடுத்து, சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் புழல்  பகுதியில் உள்ள குடோன் மற்றும் மாங்காடு பகுதிகளில் உள்ள குடோன்க ளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 150 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா உள்ளிட்ட 20 கிலோ புகையிலைப் பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, பரணிபுத்தூரைச் சேர்ந்த கனகலிங்கம் என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோன்று, பெரிய கொளுத்துவான்சேரியில் உள்ள குடோனில் சோதனையிட்டதில், சிகரெட் பாக்கெட்டுகள், பிஸ்கெட் மற்றும் சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே  கோவையில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் சட்ட விரோதமாக குட்கா போதைப்பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.