மும்பை:

குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில், ‘‘காக்ரா என்ற உணவு வகை மீது விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை 5 சதவீதமாக குறைத்திருக்கிறது. குஜராத்தில் சிறு வியாபாரிகள் வீதியில் இறங்கி ஜி.எஸ்.டி.க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால், குஜராத்தில் தேசவிரோத சூழல் உருவானது. ஆகையால், ஜி.எஸ்.டி. வீதத்தை குறைக்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

மோடி தொடக்கத்தில் இருந்தே ஒரே சீரான வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் குஜராத் முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில், ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும்பட்சத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துவிடும் என்றும் பொருளாதார வளர்ச்சி திணறிவிடும் என்றும் கருதினார்.

ஆனால், பாஜ ஆட்சி வந்ததும் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டது. மோடி தன்னுடைய வார்த்தைகளை பின்வாங்கி கொண்டார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடைமுறை நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்திவிட்டது. சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி. வீதத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் சில மாற்றங்களை செய்து சில பொருட்களுக்கான வரி விதிப்பை குறைத்தது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.