தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து பக்கோடா மற்றும் டீ கடை போட்டு பிழைப்பு நடத்திவரும் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
RazorPay மற்றும் Phonepe மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு 2023-24 ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் ₹40 லட்சத்திற்கு வியாபாரம் செய்துள்ள பானி பூரி வியாபாரிக்கு இந்த ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி வரம்பை மீறி வியாபாரம் நடைபெற்றுள்ளதை அடுத்து அவருக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், “₹40 லட்சம் என்பது அவர் பெற்ற தொகை, அது அவருடைய வருமானமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அதில் மூலதனத்தை கழிக்க வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
வேறொரு நபரோ, “பல கல்லூரிகளில் பேராசிரியர்களாக வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தை விட பானி பூரி விற்பவரின் வருமானம் அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Golgappe Sevpuri Tax என்று இதைப் பலரும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வரும் நிலையில் இந்த சம்மன் யாருக்கு வழங்கப்பட்டது என்பது இதுவரை தெளிவாகவில்லை.
அதேவேளையில், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்த பானி பூரி வியாபாரி இனி தனது வாடிக்கையாளரிடம் இருந்தும் ஜி.எஸ்.டி. வசூலிக்க வாய்ப்பு உள்ளதை அடுத்து வேறு கடையை தேட துவங்கியுள்ளனர்.