சென்னை: மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் புராதன சின்னங்கள் பராமரிப்பு, கால்வாய், தடுப்பணை உள்ளிட்ட ஒப்பந்த பணிக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தமிழக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின்படி ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழாய் பதிப்பு, குடிநீர் விநியோகம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைக்கான ஒப்பந்த பணிக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மண் சார்ந்த வேலைக்கான ஒப்பந்தங்களுக்கு ஜி எஸ்.டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை பரிந்துரை செய்தது.அதன் படி கால்வாய்கள், அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 % லிருந்து 18 % வரை உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடும் துறைகளும் 12 % அல்லது 18 % என மதிப்பீடு செய்து தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி விகிதங்களின் அடிப்படையில் கூடுதல் நிதியை முன்கூட்டியே ஒதுக்கினால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும் என்று, அனைத்து துறை தலைவர்களுக்கு நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இதுநாள் வரை வசூலிக்கப்ட்ட வரியிலிருந்து கூடுதலாக 6 சதவீதம் வரி வசூலிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதால், ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.