டெல்லி: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சதவிகிதத்தை குறைந்த பட்சம் 8 சதவிகிதமாக அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மத்திய நியமைச்சர் தலைமையில், மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்னும் ஓரிரு நாளில் நாடு திரும்பியதும், ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் என கூறப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரிவீதத்தை முறைப்படுத்துதல், மாநிலங்களுக்கு இழப்பீ்டு வழங்குவதை நீட்டித்தல் குறித்த விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி கொண்டுவரப் பட்டபோது ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வரிஇழப்பீடு தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது, அந்தவகையில் வரும் ஜூன் மாதத்தோடு 5 ஆண்டுகாலம் முடிவடைய உள்ளதால், இனிமேல் மத்தியஅரசு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கத் தேவையில்லை. ஆனால், ஏற்கனவே மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை பல்லாயிரம் கோடிகள் நிலுவையில் உள்ளது. இது வர இருக்கும் கூட்டத்தில் எதிரொலிக்கும் என தெரிகிறது.
அத்துடன் ஜிஎஸ்டி வரிஅமைப்பு முறையை எளிமைப்படுத்துவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதன்படி வரிவிதிப்பை மறுஆய்வு செய்தலும், வரிவிலக்கில் இருக்கும் பொருட்களையும் மறுஆய்வு செய்தலும் நடக்கும். அதாவது தற்போது வரிவிலக்கில் இருக்கும் பல பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படலாம். சிலவரிகள் நீக்கப்பட்டு, புதிய வரி உருவாக்கப்படலாம், அல்லது குறைக்கப்படலாம்.
அதாவது 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிகள் நீக்கப்பட்டு ஒரேஒரு வரி மட்டும் கொண்டுவரப்படலாம். 5 சதவீத வரி நீக்கப்பட்டு, 8 சதவீதமாக உயர்த்தப்படலாம். தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5, 12, 18 28 ஆகிய வீதத்தில் இருக்கிறது. இந்த படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன