டெல்லி: கொரோனா மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், தமிழக நிதிஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உற்பட பல மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கடந்த மாதம் 29ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்தனர். வரி விலக்கு அளிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில், இன்றைய கூட்டத்தில், கொரோனா மருந்து பொருட்கள், கொரோனா நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு மற்றும் வரிச்சலுகை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மாநில நிதி மந்திரிகள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு குழுவின் பரிந்துரையை ஏற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனாவுக்கான ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர் மாஸ்க் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படும்.
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு வரி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
டோசிலிசுமாப் மருந்துக்கும் வரி இல்லை.
கொரோனா சோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றின் வரியும் குறைக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 5% ஜிஎஸ்டி நீடிக்கிறது.
ஆர்டி-பி.சி.ஆர் இயந்திரங்கள், ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் மரபணு வரிசைமுறை இயந்திரங்கள் போன்ற சிலவற்றுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 12% ஆக குறைக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பானது வரும் செப்டம்பர் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்த காலக்கெடுவை நெருங்கும் நேரத்தில் மேலும் வரிகுறைப்பை நீட்டிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.