டில்லி
வாகனங்கள், சோடா குளிர் பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி இழப்பீடு வரி 2025-26 வரை தொடர உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடெங்கும் ஜிஎஸ்டி அமலில் உள்ளது. ஏற்கனவே மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு வரிகள் ஜிஎஸ்டியில் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. இந்த இழப்பீட்டை வழங்க ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிக்கப்பட்டது. இதில் ஆடம்பரப் பொருட்களுக்கு 5% கூடுதல் செஸ் வரி விதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாகச் சென்ற வருடம் அனைத்து வர்த்தகமும் முடங்கிப் போனது. எனவே மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் மிகவும் குறைந்தது. இதையொட்டி இழப்பீட்டு செஸ் வரி வருமானத்தில் ரூ.7.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு ஏப்ரல் 2020 இல் தொடங்கி உள்ளது. இது 2022 ஜூன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி 2025-26 ஆம், வருடம் வரை நீட்டிக்கப்பட்டால் மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு நிலுவைத் தொகை அளிக்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே 2021-22 ஆம் வருடத்துடன் முடிவடைய வேண்டிய நிலையில் அது 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வாகனங்கள், சோடா உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றைப் பயன்படுத்துவோர் இந்த இழப்பீட்டுக் கூடுதல் செஸ் வரியை வரும் 2026 ஆம் வருடம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.