டில்லி

த்திய அரசுக்கு ஜி எஸ் டி இழப்பீடு வரி வருமானம் ரூ.63200 கோடி வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடெங்கும் ஜி எஸ் டி அமலாக்கப்பட்டுள்ளது.   இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்காக  இழப்பீடு அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.   கடந்த இரு வருடங்களாக ஜி எஸ் டி இழப்பீடு மாநிலங்களுக்கு குறித்த காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.   ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த தொகையை உடனடியாக வழங்கப் பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.   கடந்த 18 ஆம் தேதி அன்று ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கான நிலுவைத் தொகையில் ரூ.35,298 கோடி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.    இந்த வருடம் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக உள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக நிதி அமைச்சகம் கூறி உள்ளது.

ஜி எஸ் டி கவுன்சிலுக்கு இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.   அந்த அறிக்கையில், “கடந்த வருடத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரிக்கான வருமானம் ரூ. 96,800 கோடி வரும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது.   ஆனால் கிடைத்தது ரூ.95,081 கோடி மட்டுமே ஆகும். இந்த வருடம் இழப்பீட்டுக்கு ரூ.1.6 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

ஆனால் இந்த வருட வரி இழப்பீட்டு வருமானம் ரூ.96,800 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆகவே இந்த நிதி ஆண்டில் இழப்பீட்டு வரி வருமானம் ரூ.63,200 கோடி அளவு குறைய வாய்ப்புள்ளது.   இது சென்ற இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த வருமானம்  ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.