சென்னை,

ரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும் நிலையில், தமிழக சட்டபேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக சட்டசபை ஜுன் மாதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்   ஜனவரி மாதம் 23ம் தேதி ஒருவாரம் நடைபெற்றது. பின்னர் திடீரென  சட்டசபை முடித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

எந்தவித மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறாத நிலையில், தமிழக சட்டசபை முடித்து வைக்கப்பட்டது அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது இருப்பதால் சட்டமன்றத்தை கூட்டவேண்டிய அவசரம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1 ம் தேதிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு, மார்ச் 16 ம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவையில், 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை நடைபெற்றது. அன்றே பேரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

பொதுவாக, பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடை பெறுவது வழக்கம்.  ஆனால் மானிய கோரிக்கையின்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்து.

இதற்கிடையே, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் நேரில் வலியுறுத்தினார்.

பின்னர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேரவைத் தலைவரிடம்  கோரிக்கையை முன்வைத்த்னர்.

இதுகுறித்து கவர்னருக்கும் மு.க.ஸ்டாலின் கடிதமம் எழுதினார். ஆனால், பேரவையை கூட்டப்படாமல் கடந்த 11-ம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஜூலை மாதம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையால், இதுவரை ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

ஆகவே வரும் ஜூன் மாதத்திற்குள் ஜிஎஸ்டி மசோதா கூட்டப்பட வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு தமிழக சட்டமன்றம் கூடுவது அவசியமாகிறது. அத்துடன் மாநிய கோரிக்கைகள் பற்றிய விவாதமும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சட்டசபை முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதால், இதுகுறித்து மாநில ஆளுநர்  உத்தரவு பிறப்பித்தால் தான் சட்டமன்றம் கூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் தொடர் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான,  நீட் நுழைவுத் தேர்வு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் தலைவிரித்தாடி வரும் நிலையில், சட்டமன்றம் கூடினால் காரசாரமாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை.