சென்னை: 

குரூப்1 தேர்வு எழுதுவோரின் வயது வரம்பு மேலும் 2 ஆண்டு உயர்த்தி  டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டு உள்ளது.

பொதுப்பிரிவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆகவும்,  எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பு 35ல் இருந்து 37 ஆகவும் உயர்த்தி  உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ருவாய் கோட்டாட்சியர் (துணை கலெக்டர்), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (கிரேடு-1) வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற  பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணிகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த குரூப்-1 தேர்வுக்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இதுவரை  குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக,  கேரளம், குஜராத், பிஹார் போன்ற மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 39, 38, 45, 45 என்ற அளவில் உள்ளன.  எனவே, இதர மாநிலங்களில் இருப்பதைப் போல், தமிழகத்திலும்  குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை  உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதைத்தொடர்ந்து, தற்போது குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.