சென்னை,

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதி, 1955ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அவ்விதி எந்தவித மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்பட்டு வருவதாகவும், வெளிமாநில விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவினராக கருதப்படுவதால், தமிழகத்தில் உள்ளோருக்கான இடஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தேர்வாணைய செயலர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை என்றும், பிற மாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு, 30,098 விண்ணப்பதாரர்கள் பணிநியமனம் பெற்றுள்ளதாகவும், அவற்றில், 11 பேர் மட்டுமே பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில்  டிஎன்பிஎஸ்சி செயலர் தெரிவித்துள்ளார்.