மணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி

பீகார் மாநிலம் பாலிகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் டெல்லியில் உள்ள குருகிராமில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 15 ஆம் தேதி அவருக்குச் சொந்த ஊரில் திருமணம் நடந்துள்ளது.

கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னர் அவர் டெல்லியில் இருந்து காரில் ஊருக்கு வந்துள்ளார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் மணமகள் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

கொடுமை என்னவென்றால், திருமணம் முடிந்த மறுநாளே கொரோனாவுக்கு  அவர் பலியானார்.

அதிகாரிகளுக்குத்  தெரியாமல் அவரது சடலத்தை உடனடியாக உறவினர்கள் எரித்து விட்டனர்.

எனினும், அரசல் புரசலாக கொரோனாவுக்கு புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டது.

அந்த கல்யாணத்தில், விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, பெரும் கூட்டமே திரண்டுள்ளது.

உறவினர்கள், விருந்தாளிகள் என நான்கு கட்டமாகக் கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களுக்குச் சோதனை நடத்தப்பட்டதில், 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் பீகாரில் இத்தனை  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதன் முறை என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

-பா.பாரதி.