மதுரை,

துரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.

பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு உடுத்தி  வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்​.

இன்று காலை  வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான மக்கள்  கைகளில் தீபம் ஏந்தி வரவேற்றனர். கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் வான் அதிர்ந்தது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பெளர்ணமி தினமான இன்று நடைபெற்றது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கியதை தொடர்ந்து வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்க மதுரையில் திரண்டனர்.

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்த கள்ளழகரை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர் சேவையுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரை புறப்பட்டார். நேற்று அதிகாலை மதுரை மூன்று மாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையுடன் அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து நேற்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் அணிந்துதான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார்.

அதன்படி இரவு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளு டைய திருமாலையை அணிந்து கிளி பரிவட்டம் உள்ளிட்வைகளை உடுத்தி கொண்டு பக்தகோடிகளுக்கு கள்ளழக ராக காட்சியளித்தார்.

முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருக்கோவிலின் சார்பில் ஸ்தானிகர் பெற்று கொண்டு நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மதுரைக்கு சென்றார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள டி.குண்ணத்தூரில் சில மணிநேரங்கள் ஆண்டாள் மாலை அடங்கிய பெட்டி இறக்கிவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஜனைகள் பாடப்பட்டன. கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் தல்லாக்குளம் பெருமாள் கோவில் வைத்து நேற்றிரவு அழகருக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.

முன்னதாக ஆற்றுக்கு செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் இறங்கினார்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

இன்று காலை 7 மணிக்கு, வீரராகவப்பெருமாள் இவரை வரவேற்றுக் காத்திருக்க ஆற்றில் இறங்கினார். இந்த அற்புதக் காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் நேற்று இரவு முழுவதும் வைகைக் கரையோரம் காத்துக்கிடந்தனர்.

இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகா் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.